வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே!
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!
விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!
பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
அல்லல்போம், வல்வினைபோம் அன்னை வயிற்றில்
பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம்
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன்
என் உள்ளக் கருத்தின் உளன்
முன்னவனே யானை முகத்தவனே!
முத்திநலம் சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும் பெருகும்
ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!
மங்களத்து நாயகனேமண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!
வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!